மதுரை, காரைக்குடியில் 20 பேருக்கு கொரோனா மும்பையில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பு


மதுரை, காரைக்குடியில் 20 பேருக்கு கொரோனா மும்பையில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 May 2020 4:50 AM GMT (Updated: 16 May 2020 4:50 AM GMT)

மதுரை, காரைக்குடியில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து வந்தவர்களால் தொற்று அதிகரித்து வருகிறது.

காரைக்குடி,

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். 88 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று மதுரையைச் சேர்ந்த மேலும் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 5 பேர் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மற்ற 6 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த 37 வயது வாலிபர், சென்னையில் ஆம்புலன்சு டிரைவராக பணியாற்றி வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருடைய மனைவி மற்றும் 13 வயது மகன் ஆகியோருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.

மும்பையில் இருந்து வந்தவர்கள்

மதுரை சேடபட்டி, எழுமலை பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து பஸ் மூலம் மதுரை வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு உள்ள மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே அவர்களுக்கு கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அதே பகுதியை சேர்ந்த 5 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்னும் 2 பேர் மதுரை விராட்டி பத்து பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். மற்றொருவர் மதுரை புது விளாங்குடி பகுதியை சேர்ந்த 43 வயது நபர். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மற்றொருவர் மதுரை ஊர்மெச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணி. இவருக்கு எப்படி பரவியது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கொரோனா வார்டு

இதனை தொடர்ந்து 11 பேரும் தற்போது கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மதுரையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 143-ஆக உயர்ந்துள்ளது. இது போல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 53 ஆக உயர்ந்துள்ளது.

காரைக்குடியில் 9 பேர்

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 22 பேர், கடந்த 13-ந் தேதி ஒரு வேனில் மும்பையில் இருந்து காரைக்குடிக்கு வந்தனர். இதையறிந்த சுகாதாரத்துறையினர் அவர்களை காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அங்கு தனிமைப்படுத்தி வைத்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அதில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 8 பேர் ஆண்கள். ஒருவர் சிறுமி.

இதையடுத்து அந்த 9 பேரையும் சுகாதாரத்துறையினர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து வந்த காரைக்குடியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது 10 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story