கன்னியாகுமரியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு - சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு
கன்னியாகுமரியில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிறவர்களை தனிமை படுத்தி வைத்துள்ள முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார். அப்போது, தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை பாராட்டினார்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்திற்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிறவர்கள் மாவட்ட எல்லைகளில், கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப் படுகிறார்கள். பின்னர், பரிசோதனை முடிவு தெரியும் வரை, கன்னியாகுமரி மற்றும் அகஸ்தீஸ்வரத்தில் தங்கும் விடுதிகளிலும், கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப் படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவை மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், கன்னியாகுமரியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் வழங்கப்படுகிறதா? என அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பரிசோதனை முடிந்து சொந்த ஊர்களுக்கு சென்றவுடன், அவர்கள் தங்கியிருந்த விடுதி அறைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், சுகாதாரப்பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிறப்பாக பணிகள் செய்து வருவதற்காக, அவர்களை பாராட்டினார். அவர்களுக்கு தேவையான முக கவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதுபோல் அகஸ்தீஸ்வரத்தில் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கன்னியாகுமரி கடற்கரையில் படித்துறைகட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, பயிற்சி துணை கலெக்டர் பிர்தவுஸ் பாத்திமா, கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story