காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட 136 பேரில் 94 பேர் குணம் அடைந்துள்ளனர் - கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட 136 பேரில் 94 பேர் குணம் அடைந்துள்ளனர் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 12:00 AM GMT (Updated: 21 May 2020 8:37 PM GMT)

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட 136 பேரில் 94 பேர் குணம் அடைந்துள்ளனர் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவரும் பகுதிகளில் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் 136 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 94 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 34 பேர் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவுகளில் முறையான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

8 பேர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கும், சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் வருகிற ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்படும். அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதும், நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் மருத்துவ உபகரண கழிவுகள் அனைத்தும் உரிய முறையில் கையாளுதல் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்று காரணமாக காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தேவைகளுக்கு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) ஜீவா, துணை இயக்குனர் (சுகாதாரம்) பழனி. அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கல்பனா, காஞ்சீபுரம் வருவாய் தாசில்தார் பவானி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story