கொரோனா ஊரடங்கால் மீண்டும் தொழில் தொடங்கி எந்த பயனுமில்லை - சிற்பக் கலைஞர்கள் வேதனை
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொழில் தொடங்கினாலும் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என சிற்ப கலைஞர்கள் வேதனை தெரிவித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூரை அடுத்த முடையூர், திருவண்ணாமலையில் அடிஅண்ணாமலையில் 15-க்கும் மேற்பட்ட கற்சிற்பக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. கற்சிற்ப பணியில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கருங்கற்கள், மாவுகற்கள் மூலமாக சிலைகளை அழகிய முறையில் வடிவமைத்து வருகின்றனர்.
ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டதும், நீண்ட நாட்களுக்கு பிறகு சிற்ப தொழிலாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கி உள்ளனர். ஆனால் புதிய ஆர்டர்கள் வராததால் மீண்டும் தொழில் தொடங்கியும் எந்தப் பயனுமில்லை என வேதனையோடு தெரிவித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஊரடங்கால் சிற்ப பணிகளை செய்ய முடியாமல் இருந்தோம். இதனால் ஒவ்வொரு சிற்பக் கூடத்துக்கும் லட்சக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நாங்கள் தொழிலை தொடங்கி உள்ளோம். புதிய ஆர்டர்கள் எதுவும் வரவில்லை. எனினும், தொழில் மறந்து விடக் கூடாது என்று நாங்களே கற்சிற்பங்களை செதுக்கி வருகிறோம்.
தயார் செய்து வைத்திருந்த கற்சிற்பங்கள் விற்பனை செய்யாமல் தேங்கி உள்ளன. ஊரடங்கால் 2 மாதமாகப் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வருகிறோம். எங்களை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story