மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 105 பேர் பலி - 2,190 பேருக்கு தொற்று உறுதி


மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 105 பேர் பலி - 2,190 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 28 May 2020 5:15 AM IST (Updated: 28 May 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 105 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை திடீர் வேகம் பிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 2,190 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

மும்பை,

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் மராட்டியத்தை புரட்டிப்போட்டு உள்ளது. தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ள இங்கு, பாதித்தவர்கள் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு வாரத்துக்கும் மேலாக பாதித்தவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் 2 ஆயிரத்தை தாண்டி இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை திடீர் வேகமெடுத்து 3 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு சற்று ஆறுதல் தரும் செய்தியாக 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் மேலும் 2 ஆயிரத்து 190 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 56 ஆயிரத்து 948 ஆக அதிகரித்து உள்ளது.

105 பேர் பலி

இதேபோல மராட்டியத்தில் மேலும் 105 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். மாநிலத்தில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றுக்கு பலியாவது இதுவே முதல் முறையாகும். நாள்தோறும் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வந்த நிலையில், நேற்று முன்தினம் அதன் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்து இருந்தது.

நேற்று பலி எண்ணிக்கை திடீர் வேகமெடுத்து இருப்பதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,897 ஆக உயர்ந்து உள்ளது.

இதுவரை மாநிலத்தில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மும்பை நிலவரம்

மும்பையை பொறுத்தவரை புதிதாக 1,044 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 18 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல 32 பேர் மேலும் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் நகரில் ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,097 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சியில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது.

மற்ற பகுதிகள் விவரம்

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 3,048 (68 பேர் பலி), தானே புறநகர் - 510 (5), நவிமும்பை மாநகராட்சி - 2,294 (39), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,052 (18), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 214 (6), பிவண்டி மாநகராட்சி - 100 (3), மிரா பயந்தர் மாநகராட்சி - 563 (10), வசாய் விரார் மாநகராட்சி - 645 (16), ராய்காட் - 502 (12),

பன்வெல் மாநகராட்சி - 394 (13). மாலேகாவ் மாநகராட்சி - 722 (47). புனே மாநகராட்சி - 5,830 (276), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 374 (7), சோலாப்பூர் மாநகராட்சி - 652 (50), அவுரங்காபாத் மண்டலம்- 1,572 (58), நாக்பூர் மாநகராட்சி - 475 (9).

Next Story