மராட்டியத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 30-ந் தேதி வரை பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கு தடை


மராட்டியத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 30-ந் தேதி வரை பஸ், ரெயில், விமான போக்குவரத்துக்கு தடை
x
தினத்தந்தி 1 Jun 2020 1:13 AM GMT (Updated: 1 Jun 2020 1:13 AM GMT)

மராட்டியத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு விமானம், ரெயில், பஸ் ஆகிய பொது போக்குவரத்துக்கு வருகிற 30-ந் தேதி வரை தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட 4-வது கட்ட ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மத்திய அரசு அறிவிப்பின் அடிப்படையில் மராட்டியத்தில் வருகிற 30-ந் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் வணிக வளாகங்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் தவிர மற்ற அனைத்து சந்தைகள் மற்றும் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

வழிபாட்டு தலங்கள், ஓட்டல்கள், உணவகங்கள் தொடர்ந்து மூடியே இருக்கும். இந்தநிலையில் மராட்டியத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கான பஸ், ரெயில் மற்றும் விமான போக்குவரத்துக்கு வருகிற 30-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரெயில் போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த ரெயில்கள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் உள்மாவட்டங்களில் பஸ்கள் இயங்கும். ஆனால் சிவப்பு மண்டலங்களிலும், கட்டுப்பாட்டு மண்டலங்களிலும் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.

மாநிலத்தின் உள்ளேயும், வெளியேயும் எந்த பஸ்களும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story