திருபுவனை: தனியார் வங்கி ஊழியர் கொலையில் 3 பேர் கைது


திருபுவனை: தனியார் வங்கி ஊழியர் கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2020 4:56 AM IST (Updated: 6 Jun 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

தங்கை மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்ததால் ஆத்திரமடைந்து வங்கி ஊழியரை கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரது மைத்துனரே கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. திருபுவனையில் நடந்த இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருபுவனை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மாடாம்பூண்டி கூட்டுரோட்டை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 22). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருபுவனையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது திருபுவனை பாளையத்தை சேர்ந்த காயத்ரி (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் தனது மனைவி காயத்ரியுடன் ராஜேஷ்குமார் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். தற்போது அவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து குழந்தையுடன் காயத்ரி தனது தாயார் வீட்டுக்கு வந்து விட்டார். அதன்பின் கணவரின் வீட்டுக்குச் செல்லவில்லை.

இதனால் ராஜேஷ்குமார் திருபுவனைக்கு வந்து மனைவி, குழந்தைகளை அடிக்கடி பார்த்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போதும் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனைவியை பிரிந்து முதலியார் பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து ராஜேஷ்குமார் தனியாக இருந்து வந்தார். சொந்த ஊரான திருக்கோவிலூருக்கும் அவ்வப்போது சென்று வந்தார்.

காயத்ரியின் அண்ணன் செல்வராஜ் அழைத்ததன்பேரில் ராஜேஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் திருபுவனை பாளையத்துக்கு வந்தார். இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் நேற்று முன்தினம் காலை ராஜேஷ்குமார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராஜேஷ்குமாரின் மைத்துனர் செல்வராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து செல்வராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான ராம்குமார், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜேஷ்குமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

திருபுவனையில் வேலை பார்த்து வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரியை ராஜேஷ்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பின் மனைவியை அழைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். அப்போது காயத்ரி ஏற்கனவே வேறொருவரை காதலித்த விவகாரம் தெரியவந்ததையடுத்து அதுபற்றி கேட்டு ராஜேஷ்குமார் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அவருடன் கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் காயத்ரி திருபுவனை பாளையத்துக்கு வந்து தாயாரின் வீட்டில் இருந்து வந்தார். இந்தநிலையில் அடிக்கடி இங்கு வந்து சென்ற ராஜேஷ்குமார், காயத்ரிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்தார். இதுபற்றி கேட்டு ராஜேஷ்குமார் அடிக்கடி பிரச்சினை செய்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் இதை காயத்ரியின் தாயார் தட்டிக்கேட்ட போது அவரையும் திட்டியுள்ளார். இதுபற்றிய விவரங்களை அறிந்த செல்வராஜ் ஆத்திரமடைந்து ராஜேஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். இதுபற்றி தனது நண்பர் களான ராம்குமார், பிரகாஷ் ஆகியோரிடம் தெரிவித்து அவர்களது உதவியை கேட்டுள்ளார். அவர்கள் இதற்கு சம்மதித்ததையடுத்து திட்டம் போட்டு ராஜேஷ்குமாரை சவுக்குதோப்புக்கு வரவழைத்துள்ளனர். அங்கு மது வாங்கி கொடுத்து அனைவரும் சேர்ந்து குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் ராஜேஷ்குமாரை சந்தர்ப்பம் பார்த்து செல்வராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான ராம்குமார், பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story