மணப்பாறையில் தனியார் அரிசி ஆலையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


மணப்பாறையில் தனியார் அரிசி ஆலையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jun 2020 12:38 AM GMT (Updated: 16 Jun 2020 12:38 AM GMT)

மணப்பாறையில் தனியார் அரிசி ஆலை யை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

மணப்பாறையில், திருச்சி சாலையில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. அந்த பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து கருப்பு நிறத்தில் நெல் உமி மற்றும் கழிவுநீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருந்தது. நெல் உமி காற்றில் பறந்து அங்குள்ள பொதுமக்களின் கண்களில் விழுந்தது. இதனால், கண்களில் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.மேலும், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அந்த பகுதியில் தொற்றுநோய் ஏற்படும் நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை சம்பந்தப்பட்ட அரிசி ஆலைக்கு அருகே அமர்ந்து ஆலையின் செயல்பாடுகளை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

அவர்களிடம், மணப்பாறை மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரஷ்யா சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் பேச்சுவார்த் தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், மணப்பாறை தாசில்தார் தமிழ்கனி சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story