கவர்னர் கிரண்பெடியை கண்டித்து கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம்


கவர்னர் கிரண்பெடியை கண்டித்து கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2020 7:59 AM IST (Updated: 27 Jun 2020 7:59 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் கிரண்பெடியை கண்டித்து கடலில் இறங்கி மீனவர்கள் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

புதுச்சேரி,

மீன்பிடி தடைக்காலத்தின் போது மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை வழங்க கவர்னர் கிரண்பெடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையொட்டி அவரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் தடைக்காலம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி வந்தன.

இந்தநிலையில் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த கோரிக்கைக்காக மீனவர்கள் அறிவித்து இருந்த போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சட்ட சபையில் அறிவித்தபடி மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணமாக ரூ.7,500, புயல் நிவாரணத்தொகை (சேமிப்பு தொகை) ரூ.4,500, மீன் விற்கும் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், கொரோனா நிவாரண நிதி தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

கடலில் இறங்கி போராட்டம்

புயல் நிவாரணத்தொகை ரூ.4,500 வழங்க மத்திய அரசு அனுமதித்தும் அதனை வழங்க கவர்னர் கிரண்பெடி தடையாக இருப்பதாக கூறி அவருக்கு கண்டனம் தெரிவித்து தங்களது படகுகளில் கடலுக்குச் சென்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்புக்கொடி, பலூன்களை பறக்க விட்டபடி காந்தி சிலை மற்றும் தலைமை செயலகம் அருகில் திரண்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் வந்து இருந்தனர்.

நூறுக்கும் மேற்பட்ட படகுகளில் ஏராளமான மீனவர்கள் காந்தி சிலை- தலைமைச் செயலகத்திற்கு இடைப்பட்ட பகுதியில் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

மீனவர்களின் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி ஆகியோர் கடற்கரைக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். ஒரே நேரத்தில் நூறுக்கும் மேற்பட்ட படகுகளில் வந்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Next Story