கொட்டாரம் ராமர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை: கோவில்களை குறிவைக்கும் கொள்ளையர்களால் பரபரப்பு
கொட்டாரம் ராமர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவில்களை குறி வைக்கும் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் ராமர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவில்களை குறி வைக்கும் கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் நந்தனத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீராமர் கோவில் உள்ளது. இங்கு 12 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. ராமநவமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட விழாக்கள் பிரசித்தி பெற்றவை. தற்போது கொரோனா ஊரடங்கால் இந்த கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்து வந்தன.
நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவில் பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் ஊழியர் ஒருவர் கோவிலை திறக்க வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர், இதுதொடர்பாக பக்தர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன், கோவில் ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள், கோவிலின் பின்பக்க காம்பவுண்டு சுவர் வழியாக ஏறி குதித்து கோவிலின் உள்ளே சென்றுள்ளனர். அங்கு கோவில் கதவில் இருந்த பூட்டை உடைத்த அவர்கள், முதலில் அங்கு இருந்த 2 சில்வர் குடம் உண்டியல்களை உடைத்தனர். மேலும் தேவசம்போர்டுக்கு சொந்தமான நிரந்தர உண்டியலை கொள்ளையர்கள் கோவிலின் பின்பக்கம் எடுத்து சென்று உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். இதுதவிர அலுவலக அறை, சமையல் அறை, மடப்பள்ளி அறை ஆகிய அறைகளுக்குள்ளும் கொள்ளையர்கள் சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.
கருவறையின் பூட்டை உடைத்த அவர்கள், அங்குள்ள பீரோவை திறந்து தங்க பொட்டு, வெள்ளி பொட்டு மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்தனர். மேலும் சமையலுக்கு வைத்திருந்த பருப்பு, பச்சரிசி மற்றும் மிக்சி, கிரைண்டர், சிலிண்டர் உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
கைரேகை நிபுணர்கள் வந்து கோவில் உண்டியல், கதவு, சுவர் உள்ளிட்ட இடங்களில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஏனென்றால் ஒருவர் மட்டும் கோவிலுக்குள் நுழைந்து இருந்தால், கோவிலில் அங்குலம், அங்குலமாக அலசி கொள்ளையில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு இல்லை. கும்பலாக வந்து ஆளுக்கொரு திசையில் ஏதாவது சிக்குமா? என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கோவிலில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் போலீசார் கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்குவதில் தீவிரம் காட்டியுள்ளனர். நாகர்கோவில்- கன்னியாகுமரி மெயின்ரோட்டில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த துணிகர கொள்ளை நடந்து இருப்பது அங்குள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுதவிர கன்னியாகுமரி பகுதியில் மேலும் சில கோவில்களில் கொள்ளை நடந்துள்ளது. இப்படி கோவில்களை குறி வைக்கும் கொள்ளையர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐம்பொன் சிலை- அங்கிகள் தப்பின
கோவில் கருவறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஒரு பீரோவில் இருந்த வெள்ளி பொருட்களை மட்டும் எடுத்து சென்றனர். அதே அறையில் இன்னொரு இடத்தில் இருந்த 3 அடி உயர ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரது ஐம்பொன் சிலையை கவனிக்கவில்லை. அதேநேரத்தில் ஸ்ரீராமருக்கு அணிவிக்கக்கூடிய 3 அடி உயர வெள்ளி அங்கியும், 12 அடி உயர ஆஞ்சுநேயருக்கு அணிவிக்கக்கூடிய பித்தளை அங்கியும் மூலஸ்தான பகுதியில் இருந்தது. இதனையும் கொள்ளையர்கள் கவனிக்கவில்லை. எனவே ஐம்பொன் சிலையும், இந்த அங்கிகளும் கொள்ளை போகாமல் தப்பின.
தொடர் கொள்ளை; பொதுமக்கள் அச்சம்
ஸ்ரீராமர் கோவிலுக்கு அருகில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த அரிசி பையை தூக்கி சென்றுள்ளனர். இதுதவிர கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சலிங்கபுரம் பகுதியில் உள்ள முத்தாரம்மன், விநாயகர் கோவிலில் உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் ராகவேந்திரா கோவிலில் கொள்ளையடிக்க முயன்று அங்கு கண்காணிப்பு கேமரா இருந்ததால் கொள்ளையர்கள் திரும்பி சென்றனர். அந்த கேமராவில் 2 பேர் கோவிலுக்கு வந்து சென்ற விவரம் பதிவாகி இருந்தது. அந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்குள்ளாக மேலும் ஒரு கோவிலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்கள்தான் ஸ்ரீராமர் கோவிலிலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காலமாக இருப்பதாலும், பக்தர்கள் நடமாட்டம் இல்லாததாலும் கோவில்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருவது கன்னியாகுமரி பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தனிக்கவனம் செலுத்தி கன்னியாகுமரி பகுதியில் தொடர் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story