ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு கொரோனா
ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் கணவன்-மனைவி உள்பட புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அலுவலகம் மூடப்பட்டதால் மாவட்டம் முழுவதும் தபால் சேவை முடங்கியது.
ஈரோடு,
ஈரோடு காந்திஜிரோட்டில் தலைமை தபால் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் 32 வயது பெண் ஊழியருக்கு கடந்த 2-ந் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டது. மேலும், 3-ந் தேதி தபால் அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் தபால் ஊழியர்கள் உள்பட மொத்தம் 212 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனையின் முடிவு நேற்று வெளியானது. இதில் கணவன்-மனைவி உள்பட 4 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் தபால் பிரிக்கும் பிரிவில் பணியாற்றி உள்ளனர். மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் தலைமை தபால் அலுவலகம் வருகிற 16-ந் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளதால், ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள தபால் சேவை முடங்கியது. ஏற்கனவே கடந்த 6-ந் தேதி முதல் தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளதால் சுமார் ஒரு லட்சம் தபால்கள் வினியோகம் செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது. மேலும், 10 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால், தபால் சேவைக்கு மாற்று ஏற்பாடு செய்ய தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டம் முழுவதும் இருந்து பெறப்படும் தபால்களும், வேறு மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வரும் தபால்களும் மொத்தமாக ஈரோடு தலைமை தபால் அலுவலகத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து அனைத்து தபால்களும் பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தினமும் சுமார் 20 ஆயிரம் தபால்கள் பிரித்து அனுப்பப்படும்.
இந்தநிலையில் தபால் அலுவலகம் மூடப்பட்டு உள்ளதால், மற்ற மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வர வேண்டிய தபால்களும் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. மேலும், வெளி மாவட்டங்களுக்கும் தபால் அனுப்ப முடியாத நிலை உள்ளது. எனவே ஈரோடு மாவட்டத்துக்கான தபால்களை சேலம் அல்லது கோவை அலுவலகத்தில் வைத்து பிரித்து அனுப்பி வைக்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். எனவே தபால் சேவையை அளிப்பதற்காக மாற்று ஏற்பாடு பற்றி விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் நேற்று மாலை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் ஈரோடு மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேற்று முன்தினம் நிலவரப்படி 288 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 2 பேர் வேறு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால் நேற்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286 ஆனது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 196 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஈரோடு பெரியார்நகரில் 3 பேரும், ராஜாஜிபுரத்தில் 4 பேரும் கொரோனா தொற்று காரணமாக நேற்று பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களது பாதிப்பு விவரம் இன்று (புதன்கிழமை) வெளியாகும் பட்டியலில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story