மும்பையில் இன்று மழை குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்


மும்பையில் இன்று மழை குறையும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 7 July 2020 11:45 PM GMT (Updated: 7 July 2020 11:45 PM GMT)

மும்பையில் இன்று மழை பொழிவு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை, 

மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை 3 நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. நேற்று முன்தினம் நகரில் லேசான மழையே பெய்தது.

இந்தநிலையில் நேற்று மும்பையில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மதியத்திற்கு பிறகு மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கியது.

இதேபோல தானே, நவிமும்பை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக தானே மகாத்மா புலே நகாில் மரம் விழுந்து கார்கள் சேதமடைந்தன. இதேபோல நவிமும்பை பேலாப்பூரில் பஸ் டெப்போ வெள்ளத்தில் மூழ்கியது.

நேற்று மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை 6 மணி நேரத்தில் மும்பையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தானே, நவிமும்பையில் பதிவான மழை விவரம் வருமாறு:-

போரிவிலி 7 செ.மீ., காந்திவிலி 6.5 செ.மீ., முல்லுண்டு 5.8 செ.மீ., மலாடு 5.2 செ.மீ., வெர்சோவா 4.5 செ.மீ., விக்ரோலி 4.2 செ.மீ., நரிமன்பாயிண்ட் 4.2 செ.மீ., தின்தோஷி 4.2 செ.மீ., தானே 8 செ.மீ. நெருல் 8 செ.மீ., பேலாப்பூர் 7.7 செ.மீ., கோபர்கிரைனே5 செ.மீ.

இதற்கிடையே மும்பையில் இன்று(புதன்கிழமை) மழை பொழிவு குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Next Story