சேலத்தில் நடைபயணமாக வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்: பஸ்களை இயக்க கோரிக்கை
ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக, சேலத்தில் நடைபயணமாக வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்,
ஊரடங்கால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் கூலித்தொழிலாளர்கள் நடைபயணமாக வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் விரைவில் பஸ் போக்குவரத்தை தொடங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் இயக்கப்பட்டு வந்த பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்தது. இதனால் கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், மற்றும் அன்றாடம் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அருகில் உள்ள மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பாலும் விவசாயத்தொழில்கள் அதிகமாக நடக்கிறது. இந்த விவசாய கூலி வேலைக்கும், கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் குறைந்தபட்சம் சுமார் 5 முதல் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிராமங்களுக்கு வழக்கமாக பஸ்களில் சென்று வந்தனர். சிலர் தங்களது மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
தற்போது ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படாததால் விவசாய கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகாலையில் எழுந்து நடைபயணமாகவே வேலைக்கு செல்வதை காணமுடிகிறது. அதாவது கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் வசதி இல்லாத போது எப்படி வேலைக்கு சென்று வந்தனரோ? அதே போன்று தற்போது அதிகாலையில் எழுந்து வேலைக்கு தயாராகி நடை பயணமாக சென்று வருகின்றனர். அதோடு கையில் சாப்பாடு பையுடன் அவர்கள் நடக்க தொடங்கி பக்கத்து கிராமத்தில் விவசாய வேலைக்கு சென்று வருகின்றனர்.
அதேநேரத்தில் வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது வழியில் ஏதாவது இருசக்கர வாகனங்களிலோ அல்லது சரக்கு வாகனங்களில் உதவி கேட்டு ஏறிக்கொண்டு வீடு திரும்பி வந்து விடுகின்றனர். இதுபோன்று சாலைகளில் நடந்து சென்று வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் யாரையும் வழியில் வாகனங்களில் செல்பவர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்கள் வண்டியை நிறுத்தி ஏற்றி கொள்வதும் இல்லை.
ஏனென்றால் அவரிடம் இருந்து தங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளுமோ? என்ற அச்ச உணர்வில் சிலர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்று விடுவதை காண முடிகின்றது. சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் கட்டுமான வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள், சைக்கிளில் வேலைக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இருசக்கர வாகனங்கள் கூட வாங்க முடியாமல் வறுமையில் வாடும் தொழிலாளர்களுக்கு பஸ் வசதி இல்லாத காலங்களில் ஏற்பட்ட நடைபயண அனுபவம் தற்போது மீண்டும் கை கொடுக்கிறது.
எனவே அன்றாட கூலித்தொழிலாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைவில் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story