தர்மபுரியில் கொரோனாவுக்கு வெங்காய வியாபாரி பலி: உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு


தர்மபுரியில் கொரோனாவுக்கு வெங்காய வியாபாரி பலி: உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 July 2020 5:00 AM IST (Updated: 10 July 2020 4:27 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெங்காய வியாபாரி பலியானார். அவருடைய உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் ஓசூரில் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இவர் குடும்பத்தினருடன் ஓசூரில் வசித்து வந்தார். அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி வந்த இவருக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவரை தனிமைப்படுத்தி பரிசோதித்தபோது கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அந்த வியாபாரி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட 2-வது பலி இதுவாகும்.

வியாபாரியின் உடலை தர்மபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உடல் நேற்று மாலை ஆம்புலன்சு மூலம் ஓசூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் இறந்தவரின் சகோதரரான குமாரசாமிபேட்டை பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி மற்றும் அவருடைய குடும்பத்தினர், இறந்தவரின் உறவினர்கள், நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதனால் குமாரசாமிபேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story