ஆவடி மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா
ஆவடி மாநகராட்சி பகுதியில் சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் உள்பட ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
ஆவடி,
ஆவடி மாநகராட்சி பகுதியில் நேற்று சி.ஆர்.பி.எப். போலீஸ்காரர் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஆவடி மாநகராட்சி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
இதுவரை 1,023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 555 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 271 பேர் ஆஸ்பத்திரியிலும், 157 பேர் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் 20 நாடுகளில் சிக்கி தவித்த 27 ஆயிரத்து 754 பேர் சிறப்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் ஏற்கனவே 515 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நேற்று முகாமில் தங்கி இருந்தவர்களில் இலங்கையில் இருந்து வந்த 4 பேருக்கும், ஓமன், ரஷியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 3 பேருக்கும், கிர்கிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா 2 பேருக்கும், ஆர்மேனியா, கென்யா, குவைத், சவுதி அரேபியா, வளைகுடா நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 75 ஆயிரத்து 444 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 161 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story