பழனியில் வாலிபர் வெட்டிக்கொலை: சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது


பழனியில் வாலிபர் வெட்டிக்கொலை: சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது
x
தினத்தந்தி 15 July 2020 5:04 AM IST (Updated: 15 July 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் ஓட, ஓட விரட்டி வாலிபரை வெட்டிக்கொன்ற வழக்கில் 4 சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். பழிக்குப்பழியாக தீர்த்து கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பழனி,

பழனி அருகே உள்ள புது ஆயக்குடி 8-வது வார்டை சேர்ந்தவர் அலெக்ஸ் பாபு (வயது 29). பழனி வைரவன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ்குமார் (23). பழனி தெரசம்மாள் காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (24). நண்பர்களான இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

பழனி அடிவாரம் மதனபுரம் பகுதியில் வந்தபோது அங்கு பதுங்கி இருந்த 11 பேர் கொண்ட கும்பல், மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் கணேஷ்குமாரின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதனையடுத்து அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து அலெக்ஸ்பாபுவும், ஆனந்தும் ஓடினர். இதில் பழனி அருள்ஜோதி வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு அலெக்ஸ்பாபுவை அந்த கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் குற்றுயிரும், குலையுயிருமாய் கீழே சரிந்த அவரது தலை மீது கல்லை தூக்கி போட்டனர். இதில் அலெக்ஸ்பாபு பரிதாபமாக இறந்தார். ஆனந்த் அவர்களிடம் சிக்காமல் தப்பி ஓடி விட்டார். படுகாயம் அடைந்த கணேஷ்குமாருக்கு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை சம்பவம் குறித்து பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவின் பேரில், பழனி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக அலெக்ஸ்பாபு தீர்த்து கட்டப்பட்டது தெரியவந்தது.

இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய 10 பேர் கொண்ட கும்பலை, சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதன்படி பழனி அடிவாரம் குரும்பபட்டியை சோந்த மந்தி என்ற சக்திவேல் (36), பழனி குபேரபட்டிணத்தை சேர்ந்த காளிதாஸ் (24), ராமநாதநகரை சேர்ந்த குணசேகரன் (24) உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 4 பேர், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பெருவாளி என்ற பிரதீஷ் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கைதான 10 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், கடந்த 2015-ம் ஆண்டு பாலசமுத்திரம் சாலையில் உள்ள மதுபான கடை அருகே தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர் மண்டையன் என்ற சங்கர். இவர் கடந்த ஆண்டு மே மாதம், பழனியை அடுத்த அமரபூண்டி பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி, தற்போது கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் பாபு ஆவார். மண்டையன் என்ற சங்கர் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில், அவரது கோஷ்டியை சேர்ந்த பெருவாளி என்ற பிரதீஷ் தலைமையிலான கும்பல், அலெக்ஸ்பாபுவை தீர்த்து கட்டியுள்ளது.

ஆரம்பகாலத்தில் நண்பர்களாக இருந்த மாரிமுத்துவும், மண்டையன் என்ற சங்கரும் பிறகு பரம எதிரிகளாகி விட்டனர். அவர்களது தலைமையில் 2 கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். தற்போது, அவர்கள் 2 பேரும் இறந்து விட்டனர். ஆனால் அவர்களுடன் இருந்தவர்கள், பழிக்குப்பழி வாங்கும் வகையில் தனித்தனி கோஷ்டியாகவே செயல்பட்டு வருகின்றனர்.

மண்டையன் என்ற சங்கர் இறந்த பிறகு, அந்த கோஷ்டிக்கு பெருவாளி என்ற பிரதீஷ் தலைமை ஏற்று நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறோம். அவரை பிடித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது. அலெக்ஸ் பாபுவை கொலை செய்வது மட்டுமே கொலையாளிகளின் இலக்காக இருந்திருக்கிறது.

ஆனால் மோட்டார் சைக்கிளை கணேஷ்குமார் ஓட்டினார். பின்னால் அலெக்ஸ்பாபு, ஆனந்த் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்களை நோட்டமிட்டு பழனி அடிவாரம் மதனபுரம் பகுதியில் பெருவாளி பிரதீஷ் தலைமையிலான கும்பல் காத்திருந்தது. மோட்டார் சைக்கிளை அவர்கள் வழி மறித்தபோது, கணேஷ்குமார் நிறுத்தாமல் சென்று விட்டார். இதனால் தான், கணேஷ்குமாரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்தது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story