10, 12-ம் வகுப்பு பயிலும் 46 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் முதன்மைக்கல்வி அதிகாரி தகவல்


10, 12-ம் வகுப்பு பயிலும் 46 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் முதன்மைக்கல்வி அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 July 2020 9:24 AM IST (Updated: 16 July 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பயிலும் 46 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன என்று மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கூறினார்.

தஞ்சாவூர்,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறது. தமிழக அரசு தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. இதையடுத்து 10, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்திலும் விலையில்லா பாடப்புத்தகங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டன.

முதன்மைக்கல்வி அதிகாரி

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் விலையில்லா பாடப்புத்தகங்களை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். மாணவிகள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வந்து பாடப்புத்தகங்களை வாங்கிச்சென்றனர். பின்னர் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் 294 பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள் 24 ஆயிரத்து 600 பேருக்கும், 142 பள்ளிகளை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர்கள் 22 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 46 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகளுக்கு இந்த பாடப்புத்தகங்கள் வாங்கப்படுகிறது. நேற்று மதியம் வரை 8,500 மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன”என்றார்.

மாநகராட்சி பள்ளி

தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பை சேர்ந்த 67 மாணவர்களுக்கும், 12-ம் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் 47 பேருக்கும் பாடப்புத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர் வடிவேல் வழங்கினார். 

Next Story