பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு வரை ரெயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்


பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு வரை ரெயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 16 July 2020 4:16 AM GMT (Updated: 16 July 2020 4:16 AM GMT)

பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு வரை ரெயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

பொள்ளாச்சி,

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையில் தளர்வுகள் செய்யப்பட்டு பஸ், ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதால் பஸ், ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக கிணத்துக்கடவு வரை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று பாலக்காட்டில் இருந்து கிணத்துக்கடவிற்கு என்ஜினுடன் சேர்த்து 2 பெட்டிகளுடன் ரெயில் இயக்கப்பட்டது. சிறப்பு ரெயிலில் வரும் ஊழியர்கள் சிக்னல் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு அறிவுரை

ரெயில்வே தண்டவாளம், ரெயில் நிலையம், சிக்னல் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரெயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு 8.45 மணிக்கு வருகிறது. பின்னர் பொள்ளாச்சியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, கிணத்துக்கடவிற்கு 10 மணிக்கு செல்கிறது.

அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 4.45 மணிக்கு வருகிறது. பொள்ளாச்சியில் இருந்து 5.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.15 மணிக்கு பாலக்காடு செல்கிறது. எனவே தண்டவாளங்களை பொதுமக்கள் கடக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தண்டவாளங்களின் ஓரத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடக் கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story