காசிமேட்டில் சில்லரை மீன் விற்பனைக்கு தடை - சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு


காசிமேட்டில் சில்லரை மீன் விற்பனைக்கு தடை - சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 July 2020 5:23 AM IST (Updated: 18 July 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை காசிமேட்டில் சில்லரை மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

திருவொற்றியூர்,

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு தடை செய்யப்பட்டு இருந்தது. மீனவர்கள் வாழ்வாதாரம் கருதி மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என மீன் வளத்துறையும், தமிழக அரசும் அனுமதி அளித்தது. இதையடுத்து கடந்த 15-ந் தேதி முதல் காசிமேடு மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடித்தொழிலுக்கு சென்றனர்.

இவ்வாறு இவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2 நாட்களாக மீண்டும் காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நோய் தொற்று பரவும் என புகார்களும் எழுந்தது.

இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் உள்ளே போலீசார் யாரையும் அனுமதிக்காததால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் மீன்பிடிக்கச் சென்று உள்ள விசைப்படகுகள் திரும்பி வந்தால் அந்த மீன்களை விற்பனை செய்ய முறையான அனுமதி வழங்கவேண்டும் என மீனவர் கள் கோரிக்கை வைத்தனர்.

கமிஷனர் ஆய்வு

இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தலைமையில் சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண், மீன்வளத்துறை இயக்குனர் சமீரன், வடக்கு இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:-

சென்னையில் மிகப்பெரிய மீன் சந்தையான காசிமேட்டில் தொடர்ந்து மீன் விற்பனை குறித்து சர்ச்சைகள் இருந்து வருவதால் முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ஆய்வு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 20 மார்க்கெட் பகுதிகள் இயங்கி வருகிறது. அங்கெல்லாம் மீன் விற்பனை மற்றும் இறைச்சி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் வருவாய் துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சில்லரை விற்பனைக்கு தடை

ஆகையால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சில்லரை மீன் விற்பனைக்கு அனுமதி அளிக்க முடியாது. மீன்களை மொத்தமாக வியாபாரிகளுக்குதான் விற்பனை செய்ய வேண்டும். கூட்டம் சேர்க்காமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும். சமூக பரவல் ஏற்படாத வண்ணம் காசிமேடு மீன்பிடி துறைமுகம் செயல்படவேண்டும்.

காசிமேட்டில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருவதால் நோய்தொற்று ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் அதனை தடுக்கும் விதத்தில் சில்லரை மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள விசைப்படகுகள் இன்று(சனிக்கிழமை) கரை திரும்புகின்றன. அவர்கள் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்வதற்கு முறையான ஏற்பாடுகள் போலீஸ் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story