நாகர்கோவிலில் துணிகரம் கோவிலுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு


நாகர்கோவிலில் துணிகரம் கோவிலுக்குள் புகுந்து கொள்ளை முயற்சி 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 18 July 2020 4:15 AM GMT (Updated: 18 July 2020 4:15 AM GMT)

நாகர்கோவிலில் கோவிலுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காலை, மாலையில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருப்பதால் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலில் உள்ள பொருட்கள், உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடிக்க திட்டமிட்டு 2 பேர் சுவர் ஏறிக்குதித்தனர். அந்த நேரத்தில் கோவில் முன்புறம் உள்ள சாலையில் நடந்து வந்த ஒரு பக்தர், கோவில் வெளிப்புற கதவுக்கு வெளியே நின்றபடி சாமி கும்பிட்டுள்ளார். இதை பார்த்த திருடர்கள் 2 பேரும், கொள்ளை முயற்சியை கைவிட்டு, மீண்டும் சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். உடனே அந்த பக்தர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

விசாரணை

பின்னர் கோவில் நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்து அவர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்து பார்த்து விட்டு பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை என்று கூறினார்கள்.

ஆனாலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க கோவிலில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேருமே பழைய திருடர்களைப் போன்று உருவங்கள் அமைந்துள்ளது. ஆனால் முகம் தெளிவாக தெரியவில்லை என்றும் 2 பேரும் மது அருந்தியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story