ஒரத்தநாடு அருகே, முன்விரோதத்தில் விவசாய சங்க தலைவர் அடித்துக்கொலை 4 பேர் கைது


ஒரத்தநாடு அருகே, முன்விரோதத்தில் விவசாய சங்க தலைவர் அடித்துக்கொலை 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2020 9:39 AM IST (Updated: 19 July 2020 9:39 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே முன்விரோதம் காரணமாக விவசாய சங்க தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள தெக்கூர் குலாளர் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 48). இவர், கல்லணைக்கால்வாய் பாசன விவசாய நலச்சங்க தலைவராக இருந்து வந்தார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன், சங்கர், அருணாச்சலம் உள்ளிட்ட சிலருக்கும் பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நிலத்தின் அருகே ராஜேந்திரன் குழி வெட்டிக்கொண்டு இருந்தார். இதனை முருகேசன் எட்டிபார்த்துள்ளார். இதனால் மீண்டும் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அடித்துக்கொலை

அப்போது ராஜேந்திரன், சங்கர், அருணாச்சலம் உள்பட 8 பேர் சேர்ந்து முருகேசனை கட்டையால் தலையில் தாக்கினர். இதனை தட்டிக்கேட்ட முருகேசனின் மனைவி மகேஸ்வரி(38), அதே பகுதியை சேர்ந்த ஜான்சிராணி(33) ஆகியோரும் தாக்கப்பட்டனர். இதுகுறித்து முருகேசன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் தனது மனைவி மகேஸ்வரி மற்றும் ஜான்சிராணி ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

பிறகு முருகேசன், மகேஸ்வரியிடம் தனது தலையில் வலி இருப்பதாகவும், ஆனாலும் வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்வதாகவும் கூறினார். அதன்படி வீட்டிற்கு சென்று தூங்கிய முருகேசனுக்கு நள்ளிரவில் தலையில் அதிக வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முருகேசனை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

4 பேர் கைது

இதுகுறித்து முருகேசனின் மனைவி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமித்ரா 8 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தார். இதையடுத்து ராஜேந்திரன்(45), சதீஷ்குமார்(32), அருணாச்சலம்(53), ராசு(65) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதில் தொடர்புடைய சங்கர், ரெங்கநாதன், திருநாவுக்கரசு, சாமி அய்யா ஆகிய 4 பேரை தேடிவருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக விவசாய சங்க தலைவரை அடித்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story