நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 540 பேருக்கு கொரோனா அரசு அதிகாரி உள்பட மேலும் 5 பேர் பலி


நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 540 பேருக்கு கொரோனா அரசு அதிகாரி உள்பட மேலும் 5 பேர் பலி
x
தினத்தந்தி 28 July 2020 4:43 AM IST (Updated: 28 July 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் அரசு அதிகாரி உள்பட மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். புதிதாக 540 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் 349 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர், பெரியதாழை, மணப்பாடு, ஆழ்வார்திருநகரி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்துடன் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 896 ஆக அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் மாவட்டத்தில் நேற்று மட்டும் 229 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 428 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 439 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கோவில்பட்டியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவரது உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 பேர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள். நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 106 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதுதவிர அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, நாங்குநேரி, மானூர், பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் ஆகிய பகுதியை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,963 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அ/னுமதிக்கப்பட்டனர். அவர்களது வீடுகளை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்கிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 116 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். அதில் 56 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.

சார் பதிவாளர் உள்பட 4 பேர் பலி

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் இறந்து உள்ளனர். நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்த 55 வயதுடையவர் மேலநீலிதநல்லூரில் சார் பதிவாளராக பணியாற்றி வந்தார். அவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

இதுதவிர கடையம் முதலியார்பட்டியை சேர்ந்த 58 வயதுடைய பெண், முக்கூடலை சேர்ந்த 39 வயதுடைய ஆண் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த 57 வயதுடையவர் ஆகியோரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தென்காசி, சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,794 ஆக உயர்ந்துள்ளது.

Next Story