ஒரே நாளில் 768 பேருக்கு தொற்று: நெல்லை, தூத்துக்குடியில் புதிய உச்சத்தில் கொரோனா மேலும் ஒரு முதியவர் பலி


ஒரே நாளில் 768 பேருக்கு தொற்று: நெல்லை, தூத்துக்குடியில் புதிய உச்சத்தில் கொரோனா மேலும் ஒரு முதியவர் பலி
x
தினத்தந்தி 29 July 2020 4:39 AM IST (Updated: 29 July 2020 4:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் கொரோனா புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் 768 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் ஒரு முதியவர் உயிரிழந்தார்.

நெல்லை,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 381 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கோவில்பட்டி, ஒட்டநத்தம், புதியம்புத்தூர், கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம், கழுகுமலை, தென்திருப்பேரை, சுயம்புகாலனி, பெரியதாழை, ஆழ்வார்திருநகரி, பரமன்குறிச்சி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், ஆறுமுகநேரி, வல்லநாடு, குரும்பூர், உமரிக்காடு, ஏரல் மற்றும் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சுங்கத்துறை அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெரியதாழையை சேர்ந்த ஒரு முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளார். அவரது உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

6,278 ஆக உயர்வு

நேற்றைய நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 278 ஆக அதிகரித்து உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 747 ஆக உள்ளது. 2 ஆயிரத்து 495 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நெல்லை மாநகரில் மட்டும் 129 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக வள்ளியூர் வட்டாரத்தில் 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 36 பேர், நாங்குநேரியில் 26 பேர், சேரன்மாதேவியில் 24 பேர், பாப்பாக்குடியில் 15 பேர், அம்பை பகுதியில் 10 பேர், களக்காடு பகுதியில் 9 பேர், ராதாபுரம் பகுதியில் 3 பேர் என கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை மையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இத்துடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 350 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2 ஆயிரத்து 587 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். நேற்று மட்டும் 144 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 1,738 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 25-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து உள்ளனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,844 ஆக உயர்ந்துள்ளது. இதில் 937 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து உள்ளனர். மீதி 892 பேர் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 768 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதன் மூலம் கொரோனா புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

தொற்று வேகமாக பரவுவதால் 3 மாவட்டங்களில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தொற்று பரவும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Story