பெங்களூருவில் ரூ.30 லட்சம் தடை செய்யப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது


பெங்களூருவில் ரூ.30 லட்சம் தடை செய்யப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2020 9:51 PM GMT (Updated: 29 July 2020 9:51 PM GMT)

பெங்களூருவில் ரூ.30 லட்சம் தடை செய்யப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூரு எச்.எம்.டி. சர்வீஸ் ரோடு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு முன்பாக பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சிலர் முயற்சிப்பதாக ஜாலஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு காரில் சந்தேகப்படும் படியாக நின்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த காரில் சோதனை நடத்திய போது தடை செய்யப்பட்ட ஆயிரம் ருபாய் நோட்டுகள் ரூ.30 லட்சத்திற்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கே.பி.அக்ரஹாராவை சேர்ந்த கிரண்குமார்(வயது 30), நாகரபாவியை சேர்ந்த பிரவீன்குமார்(30), காமாட்சி பாளையாவை சேர்ந்த பவன்குமார் (24) என்று தெரிந்தது. இவர்கள் மாலகாலாவை சேர்ந்த அனுமந்தகவுடா மற்றும் விஜயநகரை சேர்ந்த ராஜசேகரிடம் இருந்து ரூ.30 லட்சத்திற்கு பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கியுள்ளனர்.

கமிஷன் ஆசைக்காக....

பின்னர் கமிஷன் ஆசைக்காக அந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் கொடுத்துவிட்டு, அவர்களிடம் பணம் வாங்க முயன்றுள்ளனர். தாங்கள் கொடுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் தெரிந்த அதிகாரிகள் மூலமாக புதிய ரூபாய் நோட்டுகளாக பெற்று தருவதாக கூறி மாற்ற முயன்றது தெரியவந்தது.

அவர்களிடம் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேர் மீதும் ஜாலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட அனுமந்தகவுடா, ராஜசேகரை போலீசார் தேடிவருகிறார்கள்.

Next Story