கர்நாடகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்று மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா


கர்நாடகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்று மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 July 2020 4:18 AM IST (Updated: 31 July 2020 4:18 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், பெண்கள், போலீஸ்காரர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஏழை, பணக்காரர்கள் என்று பாகுபாடின்றி அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது.

1 லட்சத்தைதாண்டிய பாதிப்பு

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, ராஜ்குமார் பட்டீல் தெல்கர், அனில் பெனகே, பாரண்ணா முனவள்ளி, மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேகவுடா, அஜய்சிங், சிவண்ணா, பிரசாந்த் அப்பய்யா, ராஜசேகர் பட்டீல், மகாந்தேஷ் கவுஜலகி, ரங்கநாத், பரமேஸ்வர் நாயக், சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா ஆகியோரும், எம்.பி.க்கள் சுமலதா அம்பரீஷ், பகவந்த் கூபா மற்றும் மேல்-சபை உறுப்பினர்கள் சந்தேஷ் நாகராஜ், சந்திரசேகர் பட்டீல் ஆகியோரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களில் பரத்ஷெட்டி, சரத் பச்சேகவுடா, சிவண்ணா, பிரசாந்த் அப்பய்யா, சுமலதா எம்.பி., மந்திரி சி.டி.ரவி, ஆகியோர் குணம் அடைந்து விட்டனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பசவராஜ் மத்திமோட் எம்.எல்.ஏ.

கலபுரகி புறநகர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் பசவராஜ் மத்திமோட். இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் பசவராஜ் மத்திமோட், கலபுரகியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனை அறிக்கையின் முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து தனது உறவினர் ஒருவர் வீட்டில் தனிமையில் இருந்து பசவராஜ் மத்திமோட் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் பசவராஜ் மத்திமோட் எம்.எல்.ஏ. சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் கூறியிருந்தாவது:-

எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், உறவினர் வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள். தொண்டர்கள் என்னை சந்திக்க வருவதை தடுக்கவே, எனது உறவினர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறேன் என்று கூறியுள்ளார்.

17 ஆக உயர்வு

இந்த நிலையில் நேற்று மதியம் கொப்பல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகவேந்திரா ஹித்னாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது மருத்துவ அறிக்கையில் உறுதியானது. இதனை மாவட்ட கலெக்டர் விகாஷ் கிஷோர் உறுதிப்படுத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொப்பல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து சங்கண்ணா கரடி எம்.பி. தலைமையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.

இதில் பாரண்ணா முனவள்ளி, ராகவேந்திர ஹித்னால் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதில் பாரண்ணா முனவள்ளி எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த கூட்டத்தின் போது பாரண்ணா முனவள்ளி அருகில் ராகவேந்திர ஹித்னால் அமர்ந்து இருந்தார். இதனால அவரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி இருந்தனர். மேலும் அவரிடம் இருந்து சளி, ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பசவராஜ் மத்திமோட், ராகவேந்திர ஹித்னாலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதன் மூலம் கர்நாடகத்தில் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story