தொழில் அதிபரை காரில் கடத்தி நகை, பணம் கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு


தொழில் அதிபரை காரில் கடத்தி நகை, பணம் கொள்ளை மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 July 2020 10:55 PM GMT (Updated: 30 July 2020 10:55 PM GMT)

வில்லியனூர் அருகே காரில் கடத்தி தொழில் அதிபரை தாக்கி, நகை, பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வில்லியனூர்,

புதுவை சாரம் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் குருவேல் (வயது 56). தொழில் அதிபர். அரும்பார்த்தபுரத்தில் அலுமினிய கதவு, ஜன்னல் மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று கடையில் இருந்தபோது, குருவேலை அவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒருவர், வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு சாலை மகாசக்தி நகரில் புதிதாக வீடு கட்டி வருவதாகவும், அதை பார்வையிட்டு தேவைப்படும் அலுமினியப் பொருட்கள் விவரத்தை தெரிவித்தால் அதை தங்களிடமே வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பி குருவேல் தனது மோட்டார் சைக்கிளில் மகாசக்தி நகருக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், அவரை திடீரென்று உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் நிலைகுலைந்த குருவேலை ஒரு காரில் தூக்கிப்போட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஓடும் காரில் வைத்து அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் 2 மோதிரங்களை பறித்துக் கொண்டனர்.

மேலும் 8 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் உயிரோடு விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். ஆனால் அவர் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை, ஒரு லட்சம் ரூபாய்தான் வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

காரில் கடத்தினர்

இதையடுத்து குருவேலை மிரட்டி, தனது மகனிடம் வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்தை எடுத்துக் கொண்டு அரும்பார்த்தபுரம் ரெயில்வே பாலம் அருகே வருமாறு செல்போனில் பேச வைத்தனர். பின்னர் குருவேலை காரில் கடத்திக் கொண்டு அரும்பார்த்தபுரத்துக்கு அந்த ஆசாமிகள் வந்தனர். ஏற்கனவே தெரிவித்து இருந்தபடி குருவேலின் மகன் அங்கு வந்ததும் அவரிடம் இருந்து ரூ.ஒரு லட்சத்தை வாங்கிக் கொண்டு குருவேலை அங்கு இறக்கி விட்டனர். இதுபற்றி போலீசில் தெரிவித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து அவர்கள் காரில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து புகார் செய்ததன்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கேமரா காட்சிகள் ஆய்வு

சினிமாவில் வரும் காட்சிகளையும் மிஞ்சும் வகையில் தொழில் அதிபரை கடத்தி நகை, பணம் கொள்ளையடித்த கும்பலை அடையாளம் காண்பதற்காக அரும்பார்த்தபுரம், மகாசக்தி நகர் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் பார்வையிட்டு வருகின்றனர். மர்மநபர்கள் பயன்படுத்திய காரின் பதிவு எண், செல்போன் எண்ணை வைத்தும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story