புதிதாக 344 பேருக்கு கொரோனா: நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 6 பேர் பலி


புதிதாக 344 பேருக்கு கொரோனா: நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 6 பேர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2020 7:20 AM IST (Updated: 5 Aug 2020 7:20 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 344 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 6 பேர் பலியானார்கள். தென்காசியில் 45 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

நெல்லை,

நெல்லையில் நேற்று ஒரே நாளில் 4 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். பாளையங்கோட்டையை சேர்ந்த மூதாட்டி மற்றும் டவுனை சேர்ந்த முதியவர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர் என 3 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒருவர் உயிரிழந்தார்.

155 பேருக்கு பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் நேற்று புதிதாக 155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் நெல்லை மாநகரில் 86 பேருக்கும், பாளையங்கோட்டை ஊரகப்பகுதியில் 25 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் அம்பை, ராதாபுரத்தில் தலா 3 பேர், மானூரில் 4 பேர், நாங்குநேரியில் ஒருவர், பாப்பாக்குடியில் 2, வள்ளியூரில் 13 பேர், சேரன்மாதேவியில் 10 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தச்சநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் அவருடைய மகனுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 ஆயிரத்து 438 பேர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்று மட்டும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 98 பேர் மற்றும் பிற ஆஸ்பத்திரிகளில் இருந்து 62 பேர் என மொத்தம் 160 பேர் வீடு திரும்பினர். 2 ஆயிரத்து 298 பேர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முத்தையாபுரத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவரும், தூத்துக்குடியை சேர்ந்த 67 வயது முதியவரும் கொரோனா பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளனர். இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்து உள்ளது.

மாவட்டத்தில் நேற்று புதிதாக 189 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்து உள்ளது. 1,977 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,622 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 785 பேர் தென்காசி மற்றும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story