கொரோனா நோயாளிகள் தொடர்ந்து அதிகரிப்பு: புதுவை தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2 ஆயிரம் படுக்கை வசதி


கொரோனா நோயாளிகள் தொடர்ந்து அதிகரிப்பு: புதுவை தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2 ஆயிரம் படுக்கை வசதி
x
தினத்தந்தி 7 Aug 2020 2:29 AM IST (Updated: 7 Aug 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 2 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவிலும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தினமும் பாதிப்பு

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் இருந்தநிலையில் பல்வேறு தளர்வுகளுடன் 5-ம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு வேகமாக பரவியது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. இதனால் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த பாதிப்பு தற்போது 4 ஆயிரத்து 500-ஐ தாண்டி விட்டது.

தொற்று பாதித்தவர்களுக்கு கதிர்காமம் சிறப்பு கொரோனா ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, ஜிப்மரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்தது. குறைந்த எண்ணிக்கையிலேயே தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

படுக்கைகளுக்கு தட்டுப்பாடு

இந்தநிலையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தொடக்கத்தில் ஒன்றிரண்டு என இருந்து வந்த பலி எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக 7 பேர், 5 பேர் என எகிறி வருகிறது. தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையொட்டி தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கைகளை அதிகரிப்பது குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 ஆயிரம் கூடுதல் படுக்கைகள்

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு குறைந்த அளவிலேயே வைரஸ் தாக்கம் உள்ளது. 10 சதவீதம் பேர் தான் அதிகமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தான் செயற்கை சுவாசம், வெண்டிலேட்டர் தேவைப்படுகிறது. அமைச்சர் கந்தசாமி, அவரது தாயார் மற்றும் மகன் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் உடல் நலத்துடன் உள்ளனர்.

உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் அதிக அளவில் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது. தற்போது பாதிப்பினால் இறந்த 70 பேரில் 55 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான். எனவே அந்த வயதுடையவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

வெளியில் செல்லும் போது அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 67 சதவீதம் பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். இப்போது கொரோனா பரிசோதனைகளையும் அதிகரித்து உள்ளோம். இதனால் அதிக நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 2 ஆயிரம் படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ரூ.560 கோடி

புதுவை நிதிநிலை பற்றி கடந்த சில நாட்களாக அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறேன். நமது மாநிலத்தின் வருமானம் 40 சதவீதம் குறைந்துள்ளது. மத்திய அரசும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டை கடந்த நான்கு மாதங்களாக வழங்கவில்லை. அதன்படி நமக்கு ரூ.560 கோடி வரவேண்டி உள்ளது. அதை உடனே வழங்க மத்திய நிதி மந்திரிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.

மத்திய அரசு நமக்கு இப்போது ரூ.1,500 கோடி தான் தருகிறது. ஆனால் பிற மாநிலங்களுக்கு தருவதுபோல் 41 சதவீத நிதி தந்தால் நமக்கு ரூ.2,900 கோடி கிடைக்கும். ஆனால் இப்போது 22 சதவீத நிதி தான் மத்திய அரசு வழங்குகிறது. எனவே 41 சதவீத நிதியை வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story