2 வீரர்களுக்கு கொரோனா தொற்று: கடலோர காவல்படை கப்பலில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


2 வீரர்களுக்கு கொரோனா தொற்று: கடலோர காவல்படை கப்பலில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 7 Aug 2020 7:36 AM IST (Updated: 7 Aug 2020 7:36 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, 80 வீரர்கள் ரோந்து கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடலோர காவல்படை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ‘வைபவ்‘, ‘அபிராஜ்‘, ‘ஆதேஷ்‘ ஆகிய ரோந்து கப்பல்கள் உள்ளன. இந்த கப்பல்கள் தினமும் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. ‘வைபவ்‘ ரோந்து கப்பலில் 80-க்கும் மேற்பட்ட கடலோர காவல்படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக கடலோர காவல்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கடலோர காவல்படை வீரர்கள் குடியிருப்பு பகுதியில் கொரோனா தடுப்பு மையம் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2 வீரர்களுக்கு கொரோனா

இந்த நிலையில் வைபவ் ரோந்து கப்பலில் பணியாற்றிய 2 கடலோர காவல்படை வீரர்களுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக 2 பேரும் கடலோர காவல்படை வீரர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து வைபவ் ரோந்து கப்பல் வ.உ.சி. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கப்பலில் உள்ள 80 வீரர்கள் கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் கொரோனா அறிகுறி தென்பட்ட 30 வீரர்களுக்கு மாநகர நல அலுவலர் அருண்குமார் தலைமையிலான சுகாதார பணியாளர்கள் சளி மாதிரிகளை சேகரித்து உள்ளனர். இந்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

Next Story