அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பொழிவு: நீலகிரியில் 2 இடங்களில் நிலச்சரிவு


அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பொழிவு: நீலகிரியில் 2 இடங்களில் நிலச்சரிவு
x
தினத்தந்தி 7 Aug 2020 12:15 PM IST (Updated: 7 Aug 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

4-வது நாளாக வெளுத்து வாங்கிய மழையால் அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பொழிந்தது. இதனால் நீலகிரியில் 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பலத்த காற்றால் மரங்கள் முறிந்து விழுந்தன.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 4 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா, எமரால்டு, அப்பர் பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி பகுதியில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி புதுமந்து, மார்லிமந்து, ரோஸ்மவுண்ட், ராஜ்பவன் ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மின்வாள்கள் மூலம் மரங்களை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். ஊட்டி-எமரால்டு சாலை இத்தலார் பகுதியில் ஒரே இடத்தில் 2 மரங்கள் வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் மரங்கள் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. விவசாய விளைநிலங்களில் இருந்து மண் அடித்து வரப்பட்டு சாலையில் படிந்தது. அதனால் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மண் அப்புறப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானியில் அதிக மழை பெய்து உள்ளது. குறிப்பாக அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால், அதையொட்டி உள்ள அபாயகரமான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர்.

எமரால்டு சத்யா நகரில் மின்வாரிய குடியிருப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட ஒரு குடியிருப்பில் ஊழியர்கள் தங்காமல் இருந்தனர். இதற்கிடையே நேற்று காலை அந்த குடியிருப்பு பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பையொட்டி கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் அடித்து செல்லப்பட்டது. குடியிருப்பின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. இந்த நிலச்சரிவால் மண் 400 மீட்டர் தூரம் வரை அடித்து சென்றது.

அதே பகுதியில் மற்றொரு இடத்தில் தடுப்புச்சுவர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. அதனால் அங்கு வசித்து வருபவர்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து 15 வீடுகளில் வசித்த வந்த மக்கள் உடனடியாக காலி செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் பொருட்களை எடுத்து சரக்கு வாகனங்களில் ஏற்றி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். சூறாவளி காற்றால் எமரால்டில் உள்ள விநாயகர் கோவில் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்ணாடி உடைந்தது.

நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் 22 பேர் வந்து உள்ளனர். அவர்கள் நேற்று காட்டுக்குப்பை, கிண்ணக்கொரை, தங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் 2 குழுவாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏதேனும் பேரிடர் ஏற்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

ஊட்டி-42.1, நடுவட்டம்-226, கிளன்மார்கன்-212, குந்தா-58, அவலாஞ்சி-581, எமரால்டு-175, அப்பர்பவானி-319, பாலகொலா-58, கூடலூர்-335, தேவாலா-220, அப்பர்கூடலூர்-305, ஓவேலி-74, பாடாந்தொரை-75, பந்தலூர்-181, சேரங்கோடு-179 உள்பட மொத்தம் 3223.4 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 111.15 ஆகும். நடப்பாண்டில் நீலகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் சராசரியாக 11 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 58 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. அவலாஞ்சி வனப்பகுதி என்பதால் பல மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன.


Next Story