தஞ்சை தி.மு.க. எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகத்துக்கு கொரோனா: அரசு மருத்துவமனையில் அனுமதி


தஞ்சை தி.மு.க. எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகத்துக்கு கொரோனா: அரசு மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 8 Aug 2020 4:28 AM IST (Updated: 8 Aug 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. டி.கே.ஜி.நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரானா தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளரும், தஞ்சை எம்.எல்.ஏ.வுமான டி.கே.ஜி. நீலமேகம்(வயது 56) கடந்த2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்தார். பின்னர் அவர், கரந்தையில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 2-வது நினைவு நாளையொட்டி தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நீலமேகம் எம்.எல்.ஏ. பங்கேற்காததால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று காலை வெளிவந்தது.

இதில் டி.கே.ஜி.நீலமேகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே மருத்துவக்குழுவினர், கரந்தையில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தி இருந்த நீலமேகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர், கார் மூலம் புறப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மாநகர நிர்வாகிக்கும், மாவட்ட இளைஞரணி நிர்வாகிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மேலும் எம்.எல்.ஏ.வுடன் தொடர்பில் இருந்த சிலரை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை ஏற்கனவே தஞ்சை மாவட்டம் பேராவூரணி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தராசு, ஒரத்தநாடு தி.மு.க. எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மற்றும் மயிலாடுதுறை தி.மு.க. எம்.பி. செ.ராமலிங்கம், நாகை இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. செல்வராசு ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story