மாவட்ட செய்திகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு + "||" + First Minister Edappadi Palanisamy announces various new development projects for Nellai and Tenkasi districts

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு பல்வேறு புதிய வளர்ச்சி திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தென்காசி,

நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மாவட்டங்கள் விவசாயம் நிறைந்தவை ஆகும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்க்காப்பீடு திட்டத்தின் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு திட்டம் மூலம் ரூ.8 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு உள்ளது. விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


நெல்லையில் ரூ.150 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் இந்த மருத்துவமனை 3 மாவட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது. அங்கு 330 படுக்கை வசதிகள் உள்ளன. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் 150 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். தற்போது கூடுதலாக 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தற்போது 250 மாணவர்கள் படிக்கும் அளவுக்கு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவர், பிளாஸ்மா செல்லை தானமாக கொடுத்து உள்ளார். அதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் குணமடைந்த அனைவரும் பிளாஸ்மா செல் தானம் செய்ய முன்வர வேண்டும்.

நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகின்றன. அம்ருத் திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. தற்போது 40 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கழிவுநீர் வெளியில் தேங்காது.

கூட்டு குடிநீர் திட்டம்

அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.240 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. விரைவில் பணிகள் முழுமையாக நிறைவுபெறும். இந்த திட்டம் மூலம் மாநகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் 5 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கும்.

தென்மாவட்டங்களில் தொழில் வளம் பெருக வேண்டும் என்பதில் அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் 31 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தற்போது 14 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் ரூ.650 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.

கூடுதல் வகுப்பறைகள்

தற்போது நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக உதவி கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 18 வகுப்பறைகள், ஒரு அறிவியல் ஆய்வுக்கூடம், ஒரு கழிப்பறை ஆகியவை திறந்து வைக்கப்பட்டு உள்ளன. நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக 9 வகுப்பறைகளும், பாளையங்கோட்டை காந்திமதி அம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளன. சித்தூர் தென்கரை மகாராஜா ராஜேஸ்வரன் கோவிலுக்கு அன்னதான கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. மேலும் சேரன்மாதேவி அம்மநாத சுவாமி கோவிலுக்கு செயல் அலுவலர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

கடனாநதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள காங்கேயன் அணைக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் மாறன் குளத்தில் இருந்து கல்லூர் குளத்துக்கு தண்ணீர் கொண்டுவர புதிய கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.1 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சேரன்மாதேவி அருகே ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் ஒன்று கட்டப்பட உள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

தென்காசியில்...

தென்காசி மாவட்டத்திலும் வளர்ச்சி திட்டப்பணிகள் பல்வேறு ஊர்களில் நடந்து வருகிறது. கடையநல்லூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தில் கோட்டை மலையாற்றின் குறுக்கே அச்சந்திகுளம் கால்வாய் பிரியும் இடத்தில் ஒரு படுக்கை அணை கட்டப்பட்டு உள்ளது. அதேபோல் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊர்மேலழகியான் அரசு மேல்நிலைப்பள்ளி, பாவூர்சத்திரம் அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிக்கூடங்களில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கழிவறை, குடிநீர், சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு உள்ளது.

திருமலைக்குமாரசாமி தேவஸ்தான பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் உணவருந்தும் கூடம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது. கடையநல்லூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம், விடுதி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள ஊர்மேலழகியான் குளத்தில் இருந்து கருங்குளம் குளத்துக்கு புதிய கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.1 கோடியே 96 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதிய கால்வாய்

ராமநதி நீர்த்தேக்கத்தின் உபரிநீரை ஆலங்குளம் தாலுகாவில் உள்ள ஜம்புநதி பாசன பகுதிக்கு உட்பட்ட குளங்களுக்கும், புங்கன்குளம் மற்றும் அதன் கீழ் உள்ள குளங்களுக்கும் கொண்டு செல்ல புதிய கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்காக ரூ.41 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணியை விரைவாக முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை-அம்பை சாலை விரிவாக்க பணிக்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும், டெண்டர் விட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் உற்சாக வரவேற்பு: எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் வருகை
நேற்று மதுரை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று, ராமநாதபுரம் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.
2. தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு; மத்திய ரெயில்வே மந்திரி அறிவிப்பு
தமிழகத்தில் புதிய ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார்.
3. டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும்; மாநில கல்வி இயக்குனரகம் அறிவிப்பு
டெல்லியில் வரும் அக்டோபர் 5ந்தேதி வரை அனைத்து பள்ளி கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று மாநில கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
4. பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை வரதட்சணை கொடுமைக்கு 10 ஆண்டு ஜெயில் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பெண்களை பின்தொடர்ந்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும், வரதட்சணை கொடுமைகளுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கவும் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
5. தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே நீடிக்கும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை