கொரோனா தொற்றில் இருந்து மீண்ட போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு‘உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, துணிவு போற்றுதலுக்குரியது’


கொரோனா தொற்றில் இருந்து மீண்ட போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு‘உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, துணிவு போற்றுதலுக்குரியது’
x
தினத்தந்தி 11 Aug 2020 8:35 PM GMT (Updated: 11 Aug 2020 8:35 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார். ‘உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, துணிவு போற்றுதலுக்குரியது’ என்று பெருமிதத்துடன் கூறினார்.

தூத்துக்குடி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காக்கும் முன்களப்பணியாளர்களில் போலீசாரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அவ்வாறு பணியாற்றும் போலீசார் பலரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

அவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான போலீசார் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 38 போலீசார் முழுமையாக குணமடைந்து உள்ளனர். அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

அவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று பழக்கூடை வழங்கி பாராட்டு தெரிவித்தார். அப்போது அவர், கொரோனா தொற்று மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அந்த பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் துறை பெருமிதம் கொள்கிறது என்று கூறினார். மேலும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார். அப்போது தூத்துக்குடி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story