சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா


சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற புதுவை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Aug 2020 10:29 PM GMT (Updated: 13 Aug 2020 10:29 PM GMT)

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் கலந்து கொண்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

புதுச்சேரி, 

நாடு முழுவதும் நாளை (சனிக் கிழமை) 74-வது சுதந்திர தினவிழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இதையொட்டி புதுவை உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக போலீஸ் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வந்தது.

நேற்று இறுதிகட்ட ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, முதல்-அமைச்சரை விழா மேடைக்கு அழைத்து வருவது, அணிவகுப்பு மரியாதை நடத்துவது உள்ளிட்டவை ஒத்திகை பார்க்கப்பட்டது. இதில் முதல்-அமைச்சருக்கு பதிலாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் நியூட்டன் கலந்து கொண்டார். அவருடன் போலீஸ் டி.ஜி. பி.யின் செயலாளர் பால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதன்பின் ஒத்திகையை முடித்துக் கொண்டு அங்கிருந்து அனைவரும் சென்று விட்டனர்.

தொற்று உறுதி

இந்தநிலையில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் நியூட்டனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இருந்த நிலையில் அதற்கான முடிவு நேற்று மதியம் வெளியானது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நியூட்டன் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார். இதன் எதிரொலியாக சி.பி.சி. ஐ.டி. காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு இன்று (வெள்ளிக் கிழமை) கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளது. இன்ஸ்பெக்டருடன் பணியில் இருந்த மற்ற இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சுமார் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிகாரிகள் பீதி

இதுபற்றிய தகவல் அறிந்து அணிவகுப்பு ஒத்திகையில் கலந்துகொண்ட போலீஸ் அதிகாரிகள் கலக்கமடைந்து அச்சத்தில் உறைந்துள்ளனர். பொதுவாக கொரோனா பரிசோதனைக்குட்படுத்தப்பட்டவர்கள் அதன் முடிவு வரும் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது விதி.

அந்தவகையில் இன்ஸ்பெக்டர் நியூட்டன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அணிவகுப்பு ஒத்திகையில் கலந்துகொண்டுள்ளார். இதனால் ஒத்திகையில் கலந்துகொண்ட மற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருடன் தொடர்பில் உள்ள அதிகாரிகள், போலீசார் அனைவரையும் தனிமைப்படுத்த சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு போக்குவரத்து போலீஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதேபோல் 100 அடி ரோட்டில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அங்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவருடன் பணிபுரிந்த ஊழியர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story