தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்கலாம்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற அரசு சார்பில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரத்து 380 வரை வசூலிக்கலாம்.
புதுச்சேரி,
புதுவையில் தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஜிப்மரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறிகுறி உள்ளவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரும்பாலானவர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்ட போதிலும் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முன்வருவதில்லை. பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவே விரும்புகின்றனர். இந்தநிலையில் சிகிச்சைக்காக செல்வோரிடம் அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அரசு தீவிரமாக ஆலோசித்தது.
அரசு உத்தரவு
இதையடுத்து கொரோனா சிகிச்சை பெறுவதற்காக வருபவர்களிடம் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கவேண்டிய கட்டணத்தை நிர்ணயம் செய்து புதுவை அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
கொரோனா தொற்றினை கண்டறியும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு ரூ.2 ஆயிரத்து 400 வசூலிக்கலாம். தனியார் ஆஸ்பத்திரிகளில் சாதாரண கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரத்து 250 வசூலிக்கலாம். தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யு.) உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 480, தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 580 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச கட்டணம்
தொற்று பாதிப்பு அதிகமாகி வென்டிலேட்டர் இல்லாமல் சிகிச்சை பெற ரூ.6 ஆயிரத்து 280-ம், தொற்று பாதிப்பு அதிகமாகி வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 380-ம் நாள் ஒன்றுக்கு கட்டணமாக வசூலிக்கலாம். இந்த கட்டணமானது தனிமைப்படுத்தப்பட்ட வார்டு, நிர்வாக செலவு, நர்சிங், கண்காணிப்பு, கலந்தாலோசனை, மாத்திரை, சத்தான உணவு போன்றவற்றுக்கு உட்பட்டதாகும். தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த கட்டண விகிதம் பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story