புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்


புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பலி 100-ஐ கடந்தது இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்
x
தினத்தந்தி 13 Aug 2020 10:52 PM GMT (Updated: 13 Aug 2020 10:52 PM GMT)

புதுச்சேரியில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. புதிதாக 305 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

புதுச்சேரி,

உலகையே மிரட்டும் கொரோனா இந்தியாவிலும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அரசுக்கு வலியுறுத்தல்

தொற்றை தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்பேரில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. புதுச்சேரியிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உயிர்ப் பலியும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் கவலை அடைந்த அரசு தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியது. இதற்கிடையே தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படுவது போல் புதுச்சேரியிலும் வாரம் ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது. இது குறித்து முடிவு செய்ய முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மைக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, ஓட்டல்கள், கடைகள் திறப்பு நேரத்தை குறைப்பது என தீர்மானித்து அறிவிக்கப்பட்டது. இந்த புதிய கட்டுப்பாடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

305 பேருக்கு தொற்று

புதுவை மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,082 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 305 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 50 ஆயிரத்து 92 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 43 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

6 ஆயிரத்து 680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 576 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. தற்போது 2 ஆயிரத்து 750 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அவர்களில் 1,504 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 1,246 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 3 ஆயிரத்து 828 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பலியானவர்கள் விவரம்

நேற்று காலை நிலவரப்படி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் 2 பேர், ஜிப்மரில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என 6 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். புதுவை தந்தை பெரியார் நகர் 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 65 வயது முதியவர், லாஸ்பேட்டை அன்னை நகர் 53 வயது ஆண், முதலியார்பேட்டை பட்டமாள் நகர் 50 வயது மூதாட்டி ஆகிய 3 பேரும் தொற்று பாதிப்புக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளனர்.

முதலியார்பேட்டை அனிதா நகரில் 85 வயது முதியவர், பங்கூர் மகாலட்சுமி நகரில் 49 வயது பெண் ஆகியோர் கொரோனா தொற்றால் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் பலியானார்கள். ஏனாம் பரம்பேட்டாவைச் சேர்ந்த 72 வயது மூதாட்டி கடந்த 8-ந்தேதி இறந்தார். ஏற்கனவே அவருக்கு செய்யப்பட்டிருந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இவர்களை சேர்த்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. அதாவது புதுச்சேரி பிராந்தியத்தில் 86 பேரும், ஏனாமில் 10 பேரும், காரைக்காலில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் அதிர்ச்சி

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 57.31 சதவீதமாகவும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 1.53 சதவீதமாகவும் உள்ளது. கொரோனாவினால் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பது புதுவை மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story