தாங்க முடியாத கடன் சுமை நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. அரசு தோல்வி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


தாங்க முடியாத கடன் சுமை நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. அரசு தோல்வி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 Aug 2020 5:18 AM IST (Updated: 15 Aug 2020 5:18 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. அரசு நிதி மேலாண்மையில் தோல்வி அடைந்து விட்டதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை, 

2011-ல் இருந்து கடகடவென உயர்ந்து கொண்டிருக்கும் ரூ.4.56 லட்சம் கோடி கடனும், 2014-ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து 2019-2020-ம் நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிலேயே ரூ.25 ஆயிரம் கோடி வருவாய்ப் பற்றாக்குறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையும் மேலும் அதிகமாகி தமிழகத்தின் நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்து நிற்பது கவலையளிக்கிறது.

இயல்பான நிதியாண்டிலேயே நிதி மேலாண்மையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் கடன் வாங்குவதை மட்டுமே தனக்குத் தெரிந்த ஒரே நிதி நிர்வாக உத்தியாக கற்றுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு கொரோனா பேரிடர் காலத்தில் அசாதாரணமாக மிக மோசமாகத் தோல்வியடைந்து, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தாங்க முடியாத கடன் சுமையை ஏற்றி வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது.

கண்துடைப்பு ஒப்பந்தங்கள்

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, நகர்த்தி அகற்றிட முடியாத தடைக்கல்லை உருவாக்கி, இந்த 9 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு தமிழகப் பொருளாதாரத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்துவிட்டது.

2015, 2019 ஆகிய ஆண்டுகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், முதல்-அமைச்சரின் முதலீடு திரட்டும் ‘உலகச்சுற்றுலா’, தற்போது கொரோனா காலத்தில் போடப்படும் கண்துடைப்பு ‘புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்’ என அனைத்திலும் இதுவரை முதலீடுகள் வரவில்லை.

தமிழகத்திற்குக் கிடைத்துள்ள புதிய முதலீடுகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையைக்கூட வெளியிட முடியாத, கையாலாகாத அரசாகவே இன்னும் சில மாதங்களில் இடத்தைக் காலி செய்துவிட்டு, வீட்டுக்குச் செல்லப்போகிறது அ.தி.மு.க. அரசு.

என்னுடைய ஆலோசனையை...

2020-2021-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிட்ட கையோடு, கொரோனா பேரிடர் தொடங்கிவிட்ட நிலையில் அந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் பற்றி நிதி ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்து நிதி நிலையை மறுவரையறை செய்துகொள்ள வேண்டும் என்ற ஆக்கபூர்வமான ஆலோசனையை வழங்கினேன். ஆனால் வேறு எதற்கோ நேர காலம் இருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, நான் வழங்கிய ஆலோசனை குறித்துச் சிந்தித்து பார்க்கவே இதுவரை நேரமில்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு முறை பிரதமரிடம் பேசும்போதும் ‘கொரோனா நிதி’ கேட்பதை மட்டும் அறிக்கையாக வெளியிடும் முதல்-அமைச்சர், அப்படிக் கேட்டதில் 10 சதவீத நிதி கூட வரவில்லை என்று வெளிப்படையாக ஏனோ பேசவே அச்சப்படுகிறார். மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கி விட்டோம் என்று கூறிய பிறகும் இன்றுவரை அந்த நிதி வந்ததா, இல்லையா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தைத் தமிழக மக்களுக்குக் கொடுக்கவே தயங்கி நடுங்கி நிற்கிறார்.

நிதிநிலைமை ஐ.சி.யூ.

கொரோனா பேரிடர் காலம் முடிந்த பிறகு தமிழக நிதி நிலைமை இன்னும் கடுமையாகி ஐ.சி.யூ.விற்கு எடுத்துப் போகும் சூழல் எழுந்து விட்டது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி தொழில் வளர்ச்சிக்கு கேடு விளைவித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்காத ஒரு கேடுகெட்ட ஊழல் ஆட்சியை அளித்து தமிழகத்தின் பொருளாதாரத்தை முதல்-அமைச்சர் அடியோடு புதைத்து விட்டதைத் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.

ஆகவே, ஒரு கடைசி வாய்ப்பாக இப்போதாவது முதல்- அமைச்சர் மனம் திருந்தி மக்களின் கொரோனா கால பாதிப்பையும், நிதி நிர்வாக சீரழிவையும் மனதில் வைத்து, நிதிநிலை அறிக்கையை மறு ஆய்வு செய்து எஞ்சியிருக்கும் ஆறு மாதங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையாவது எடுக்க முடியுமா? என்று, இயன்றால் ஆராய்ச்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரூ.5 ஆயிரம் நிவாரணம்

கொரோனா பேரிடரின் மீளாத் துயரில் ஒவ்வொரு குடும்பமும் மூழ்கியிருப்பதால் ஒரு ரேஷன் கார்டுக்கு தலா ரூ.5 ஆயிரம் என்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேரடி நிதியுதவி அளித்து அவர்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட முன்வர வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story