உல்லாஸ்நகர் ஆசிரமத்தில் உறியடி திருவிழா நடத்திய 100 பேர் மீது வழக்குப்பதிவு


உல்லாஸ்நகர் ஆசிரமத்தில் உறியடி திருவிழா நடத்திய 100 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 Aug 2020 1:59 AM IST (Updated: 16 Aug 2020 1:59 AM IST)
t-max-icont-min-icon

உல்லாஸ்நகர் ஆசிரமத்தில் விதிகளை மீறி உறியடி திருவிழா நடத்திய 100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அம்பர்நாத்,

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கொரோனாவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அரசு வேண்டுகோளின் பேரில் சம்பிரதாயத்துக்கு மட்டுமே உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த நிலையில் தானே மாவட்டம் உல்லாஸ்நகர் செக்டர் 35-ல் உள்ள ஈஸ்வர் பிரேம் ஆசிரமத்தில் விதிகளை மீறி உறியடி திருவிழா நடத்தப்படுவதாக ஹில்லைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர்.

இதில் அங்கு சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக உறியடி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த அனைவரும் முகக்கவசம் இன்றி சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு நடனமாடிக்கொண்டு இருந்தனர்.

வழக்குப்பதிவு

இதையடுத்து போலீசார் உறியடி நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு குழுமியிருந்த விழா ஏற்பாட்டாளர்களான சங்கீத் காரேரா, அனிதா, அசோக், மோனி கேஸ்வானி, சோனி டிசோசா, தீபிகா, ஜெயா பாட்டியா, சரஸ்வதி மற்றும் குடியிருப்பு வாசிகள் என 100 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கடந்த 2-ந்தேதி உல்லாஸ்நகர் வசான்ஷா தர்பார் பகுதியில் தடையை மீறி நடத்திய பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story