மராட்டியத்தில் புதிதாக 12,614 பேருக்கு கொரோனா தொற்று மும்பையில் பாதிப்பு அதிகரிக்கிறது
மராட்டியத்தில் புதிதாக 12 ஆயிரத்து 614 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் பாதிப்பு அதிகரிக்கிறது.
மும்பை,
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் 12 ஆயிரத்து 614 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்து 754 ஆகி உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநிலத்தில் 80 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
322 பேர் பலி
இதேபோல நேற்று மேலும் 322 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 19 ஆயிரத்து 749 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.
இதேபோல மாநிலத்தில் நேற்று 6 ஆயிரத்து 844 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 286 பேர் குணமாகி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் இதுவரை 31 லட்சத்து 11 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் அதிகரிக்கிறது
மும்பையை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு தொற்று பாதிப்பு 700 ஆக கூட குறைந்தது. இதனால் பொதுமக்கள் ஆறுதல் அடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நகரில் புதிதாக 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 718 ஆக உயர்ந்து உள்ளது.
48 பேர் பலி
மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 749 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 17 ஆயிரத்து 581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில் மேலும் 48 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்தனர். இதனால் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 86 ஆக உயா்ந்து உள்ளது.
Related Tags :
Next Story