நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு 9 பேர் பலி தூத்துக்குடியில் 94 பேர் பாதிப்பு


நெல்லை, தென்காசியில் கொரோனாவுக்கு 9 பேர் பலி தூத்துக்குடியில் 94 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2020 7:25 AM IST (Updated: 17 Aug 2020 7:25 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசியில் நேற்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். தூத்துக்குடியில் 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர், தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 2 டாக்டர்கள், முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் உள்பட 130 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர அம்பை, சேரன்மாதேவி நாங்குநேரி, களக்காடு, மானூர், பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 522 ஆக அதிகரித்தது. இதில் 5 ஆயிரத்து 953 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,447 பேர் நெல்லை அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

9 பேர் பலி

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் ஒருவர், பாளையங்கோட்டையில் 2 பேர், வீரவநல்லூரில் ஒருவர், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 2 பேர், சேரன்மாதேவி பகுதியில் ஒருவர் ஆக மொத்தம் 7 பேர் நேற்று கொரோனாவுக்கு பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 122 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 86 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 ஆயிரத்து 650 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 1,186 பேர் நெல்லை, தென்காசி அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 69 பேர் இறந்துள்ளனர்.

நேற்று சங்கரன்கோவில், கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியை சேர்ந்த 2 பேர் இறந்தனர். இவர்களின் உடல்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அடக்கம் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 94 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 964 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 751 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,124 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story