6 வீடுகளில் கொள்ளை முயற்சி: முகமூடி அணிந்த மர்மஆசாமி உருவம் சிக்கியது போலீசார் தீவிர விசாரணை


6 வீடுகளில் கொள்ளை முயற்சி: முகமூடி அணிந்த மர்மஆசாமி உருவம் சிக்கியது போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 21 Aug 2020 6:32 AM IST (Updated: 21 Aug 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் விரிகோடு பகுதியில் நடந்த கொள்ளை முயற்சியில், முகமூடி அணிந்த மர்மஆசாமி அரிவாளுடன் சுற்றி திரிந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த உருவத்தை கைப்பற்றி மார்த்தாண்டம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம் விரிகோடு பகுதியில் ஒரே நாள் இரவில் 6 வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயத்தில், வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்ட முயன்றதில் ஒருவர் தான் வந்ததாக சிலர் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உருவம் சிக்கியது

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்த மர்ம ஆசாமி, அரிவாளுடன் சுற்றி வந்தது தெரிய வந்தது. அந்த உருவத்தை கைப்பற்றிய போலீசார், பழைய குற்றவாளிகள் யாரேனும் இந்த உருவத்தோடு ஒத்து போகிறதா? என ஆய்வு செய்து வருகிறார்கள். அரிவாளுடன் முகமூடி அணிந்த நபர் விரிகோடு பகுதியில் சுற்றிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது.

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையர்கள் எந்தவித அச்சமும் இன்றி சுற்றி வருகிறார்கள். இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தினால் கொள்ளையர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்தலாம் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story