கார் டிரைவருக்கு கொரோனா: நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது


கார் டிரைவருக்கு கொரோனா: நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 22 Aug 2020 6:08 AM IST (Updated: 22 Aug 2020 6:08 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய கார் டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அந்த அலுவலகம் மூடப்பட்டது.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வரும் 32 வயது நபருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் கழுவி சுத்தப்படுத்தி அலுவலகம் மூடப்பட்டது. டிரைவர் ஓட்டி வந்த காருக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அலுவலக வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த டிரைவருடன் சென்று வந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களையும், கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த மாதம் 14-ந்தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலக இளநிலை பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அலுவலகம் மூடப்பட்டது. தற்போது கார் டிரைவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் 2-வது முறையாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ள பகுதிகளில் தடுப்பு அமைக்காமல் உள்ளது. இந்த அலுவலகத்தை ஒட்டி வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த அலுவலகங்களுக்கு விவசாயிகள், அந்த பகுதி மக்கள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சுற்றிலும் தடுப்பு அமைக்கவும், மற்ற அரசு அலுவலகங்களை மூடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story