நீடாமங்கலம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது


நீடாமங்கலம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது
x
தினத்தந்தி 23 Aug 2020 12:04 AM GMT (Updated: 2020-08-23T05:34:52+05:30)

நீடாமங்கலம் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

நீடாமங்கலம், 

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள சேர்மாநல்லூர் நேதாஜி காலனியை சேர்ந்தவர் பன்னீர். இவருடைய மகன் ராஜா(வயது28). நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ராஜா தனது நண்பர் சதீசுடன் நகர் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ராஜாவை ஓடஓட விரட்டி சித்தமல்லி பகுதியில் உள்ள வயலில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் தலை உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் வெட்டுக்காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

ராஜாவுடன் வந்த சதீசையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி அவரை மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கி சென்று சேர்மாநல்லூர் பகுதியில் விட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து சதீஷ் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் ராஜா கொலை வழக்கில் போலீசார் கம்பந்தங்குடி மேட்டுத்தெருவை சேர்ந்த முருகேசன்(வயது42), அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த தனபால் மகன் ஆனந்தபாபு(29), கம்பந்தங்குடி ரோட்டுத்தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன் நந்தகுமார்(20), கம்பந்தங்குடி நடுத்தெருவை சேர்ந்த சேகர் மகன் சுதாகர்(22), அன்னப்பன்பேட்டை விண்ணுக்குடி பகுதியை சேர்ந்த தனபால் மகன் கோபி(27), வலங்கைமான் தாலுகா பாடகச்சேரி சூரக்குடி தெருவை சேர்ந்த அருண்பாண்டி என்ற பிரகாஷ்(30) ஆகிய 6 பேரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் ராஜா கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story