காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் - விநாயகர் சதுர்த்தி விழா


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் - விநாயகர் சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 23 Aug 2020 12:40 AM GMT (Updated: 23 Aug 2020 12:40 AM GMT)

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில் புகழ் பெற்ற ஏலோலே சிங்க விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 20 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்த ஆண்டு கொரோனாவையொட்டி ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்படாமல் விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் சங்குபாணி விநாயகர் கோவில், மணிகண்டீஸ்வர் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் போன்றவற்றிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் டிபன்ஸ் காலனியில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், சந்தனகாப்பு உள்பட பல்வேறு அலங்காரங்கள் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில், அச்சரப்பாக்கம் அச்சு முறிவிநாயகர், பெரும்பேர் கண்டிகை சுயம்பு பாறை விநாயகர், காட்டு பிள்ளையார் கோவில் கிராமம் சுயம்புவிநாயகர், அச்சரப்பாக்கம் புதுப்பேட்டை கிராமம் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

அதேபோல பெரியகுப்பம் பஜார் பகுதியில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள பாதாள விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

பள்ளிப்பட்டு மேற்கு தெருவை சேர்ந்த 5 வயதில் இருந்து 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், பெற்றோர் தங்கள் செலவுக்காக கொடுத்த பணத்தில் சிறிய விநாயகர் சிலையை வாங்கி ஒரு வீட்டின் முன் வைத்து அதற்கு வண்ண காகிதங்களால் அலங்கரித்தனர்.

விநாயகருக்கு மாலை அணிவித்து சுண்டல், கொழுக்கட்டை, பாயாசம் படைத்து வழிபட்டனர். சிறுவர்களின் கடவுள் பக்தியை அங்கு இருந்தவர்கள் பெரிதும் பாராட்டினர்.

Next Story