தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை
x
தினத்தந்தி 26 Aug 2020 5:20 AM IST (Updated: 26 Aug 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2 நாட்கள் கொரோனா தடுப்பு தொடர்பான ஆய்வு கூட்டங்களில் பங்கேற்கிறார்.

தஞ்சாவூர், 

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதனை தொடர்ந்து ஏழை-எளிய மக்களுக்கும், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

நாளை நாகை வருகை

இதற்காக நாளை(வியாழக்கிழமை) பிற்பகல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூரில் இருந்து புறப்பட்டு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வருகை தர உள்ளார். அங்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு திருவாரூர் புறப்பட்டு வருகிறார்.

அன்று இரவு திருவாரூர் சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் 28-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு பிற்பகல் தஞ்சைக்கு காரில் புறப்பட்டு வருகிறார்.

தஞ்சையில் ஆய்வு

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.45 மணி வரை கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆய்வு நடத்துகிறார். மேலும் அவர், விவசாயிகளுடன் கலந்தாலோசனை செய்து விட்டு பின்னர் காரில் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்-அமைச்சர் தஞ்சை வருகை தரவுள்ளதை முன்னிட்டு அவர் செல்லும் வழியில் உள்ள சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

சாலையோரங்களில் இருந்த முள்செடிகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் விழா நடைபெறும் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Next Story