சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
x
தினத்தந்தி 2 Sept 2020 5:28 AM IST (Updated: 2 Sept 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று 1 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

நெல்லை,

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கினர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து இறந்தனர். இந்த கொலை வழக்கை டெல்லி சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாாரிகளின் குடும்பத்தினர், உறவினர்கள், கடைக்கு அருகே உள்ள மற்ற கடைக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.

தற்போது இந்த வழக்கு விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு ஏற்கனவே சேகரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டனர்.

டாக்டர்களிடம் விசாரணை

இந்த நிலையில் சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் அதிகாரிகள் சாத்தான்குளம் சென்று ஜெயராஜ் மனைவியும், பென்னிக்ஸ் தாயாருமான செல்வராணியை நேற்று இரவு 7 மணி அளவில் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு செல்வராணிக்கு பரிசோதனைக்காக ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டது. பின்னர் அவர் சாத்தான்குளம் புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். அதாவது ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, உடன் இருந்த டாக்டர்களிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை இரவு 7.30 மணிக்கு தொடங்கி 8.30 மணிக்கு நிறைவடைந்தது. சுமார் 1 மணி நேரம் டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையை முடித்துக் கொண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு பிரேத பரிசோதனை செய்த டாக்டர்களிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story