பெங்களூருவில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.பி.சர்மா குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி


பெங்களூருவில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.பி.சர்மா குண்டு காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 2 Sep 2020 11:45 PM GMT (Updated: 2 Sep 2020 11:45 PM GMT)

பெங்களூருவில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.பி.சர்மா குண்டு காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடக மாநில போலீஸ் வீட்டுவசதி வாரிய டி.ஜி.பி.யாக பணியாற்றி வருபவர் ஆர்.பி.சர்மா. இவர் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆர்.பி.சர்மா கடந்த 1977-ம் ஆண்டு ஐ.பி.எஸ். குழுவை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூரு கொத்தனூர் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆர்.பி.சர்மா தனது அறையில் இருந்தார். அப்போது அவரது அறையில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த அறைக்கு சென்று பார்த்தனர். இந்த சந்தர்ப்பத்தில் கழுத்து, நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் ஆர்.பி.சர்மா உயிருக்கு போராடினார்.

தற்கொலை முயற்சி?

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஆர்.பி.சர்மாவை மீட்டு கொலம்பியா ஆசியா தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், கொத்தனூர் போலீசார் சம்பவம் நடந்த ஆர்.பி.சர்மாவின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்திரினரிடம் விசாரித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஆர்.பி.சர்மாவுக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ஆர்.பி.சர்மா துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது தவறுதலாக குண்டு பாய்ந்ததா? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story