புதிதாக 5,990 பேருக்கு தொற்று: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது


புதிதாக 5,990 பேருக்கு தொற்று: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 3 Sept 2020 5:54 AM IST (Updated: 3 Sept 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது என்றும், நேற்று புதிதாக 5,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 73 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,465 ஆண்கள், 2,525 பெண்கள் என மொத்தம் 5,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 26 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 182 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 852 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,025 பேரும், கோவையில் 579 பேரும், கடலூரில் 405 பேரும், சேலத்தில் 403 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 10 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 47 லட்சத்து 99 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 4 லட்சத்து 39 ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 688 ஆண்களும், 1 லட்சத்து 74 ஆயிரத்து 242 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 29 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 20 ஆயிரத்து 131 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 57 ஆயிரத்து 306 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

98 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 57 பேரும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 41 பேரும் என மொத்தம் 98 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், கன்னியாகுமரியில் 9 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும், கோவை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் தலா 5 பேரும், சேலத்தில் 4 பேரும், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், நெல்லை, திருப்பூர், விழுப்புரத்தில் தலா 3 பேரும், கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், தேனி, திருப்பத்தூர், திருச்சி, வேலூரில் தலா 2 பேரும், ஈரோடு, நீலகிரி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 7,516 பேர் உயிரிழந்துள்ளனர்.

5,891 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 891 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,587 பேரும், கடலூரில் 404 பேரும், செங்கல்பட்டில் 396 பேரும், திருவள்ளூரில் 315 பேரும், தென்காசியில் 276 பேரும் அடங்குவர். இதுவரை தமிழகத்தில் 3 லட்சத்து 80 ஆயிரத்து 63 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 52 ஆயிரத்து 380 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 921 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 854 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 132 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 369 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு தனியார் நிறுவனம் மற்றும் ஒரு அரசு மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 64 அரசு மற்றும் 90 தனியார் என 154 நிறுவனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story