மாமல்லபுரத்தில் அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களுக்கு விடுதி அறை வழங்க கூடாது உதவி போலீஸ் சூப்பிரண்டு பேச்சு


மாமல்லபுரத்தில் அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களுக்கு விடுதி அறை வழங்க கூடாது உதவி போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
x
தினத்தந்தி 3 Sept 2020 6:20 AM IST (Updated: 3 Sept 2020 6:20 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களுக்கு ஓட்டலில் விடுதி அறை வழங்க கூடாது என்று மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தெரிவித்தார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், பண்ணை வீடுகள் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவாத வகையில் நட்சத்திர ஓட்டல், விடுதி நிர்வாகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அதன் உரிமையாளர்கள், நிர்வாக மேலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் நடந்தது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் முன்னிலை வகித்தார்.

அதிக உடல் வெப்பநிலை

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நட்சத்திர ஓட்டல், விடுதி மேலாளர், அதன் உரிமையாளர்களிடையே உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பேசியதாவது:-

சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்களில் தங்க வருபவர்கள் கொரோனா தொற்று உடைய நபரா என்பதை முன்னெச்சரிக்கையாக அறிந்து கொள்ளும் வகையில் தெர்மல் மீட்டர் கருவி மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். 100 டிகிரிக்கு மேல் அதிக உடல் வெப்பநிலை காட்டும் நபர்களுக்கு அறைகள் வழங்கக் கூடாது.

குறிப்பாக ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் உள்ளதால் மாமலலபுரம் கடற்கரையோர நட்சத்திர ஓட்டல் நிர்வாகங்கள் தங்கும் விருந்தினர்களை கடற்கரைக்கு செல்லவும், கடலில் குளிக்கவும் அனுமதிக்க கூடாது. நீச்சல் குளங்களுக்கு தடை உள்ளதால் ஓட்டல் நிர்வாகங்கள் விருந்தினர்களை நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்க கூடாது. அதனால் நீச்சல் குளங்களில் தண்ணீர் நிரப்பாமல் காலியாக வைத்திருக்க வேண்டும். உணவகங்களுடன் கூடிய விடுதிகளில் ஒரு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு நாற்காலிகள் அமைத்து ஓட்டல் நிர்வாகங்கள் உணவு பரிமாற வேண்டும்.

கேளிக்கை நிகழ்ச்சிகள்

அதிகமானோர் பங்கேற்கும் கேளிக்கை நிகழ்ச்சிகள், விருந்து என எந்த நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதிக்க கூடாது. ஓட்டல் அறைகளில் தங்குபவர்களுக்கு திடீரென அதிக காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதனால் அனைத்து ஓட்டல், விடுதி நிர்வாகமும் சுகாதாரத்துறை கொரோனா தொற்று பிரிவு அதிகாரிகளின் தொலைபேசி எண்களை அவசர தேவைக்காக ஓட்டல் கணினியில் கண்டிப்பாக பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story