நீட் தேர்வில் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை - உதயநிதி ஸ்டாலின் பேட்டி


நீட் தேர்வில் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 13 Sep 2020 10:15 PM GMT (Updated: 14 Sep 2020 4:55 AM GMT)

நீட் தேர்வில் மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை என்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

ஓமலூர், 

தர்மபுரி இலக்கியம்பட்டி செந்தில்நகர் செவத்தா கவுண்டர் தெருவை சேர்ந்த மணிவண்ணன்-ஜெயசித்ரா தம்பதியின் ஒரே மகன் ஆதித்யா (வயது20). நீட்தேர்வு எழுத தயாரான அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல், ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பாலிக்காடு பகுதியில் உள்ள மணிவண்ணனின் விவசாய நிலத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இதையொட்டி அந்த மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பூசாரிப்பட்டிக்கு நேரில் வந்தார். அங்கு மாணவரின் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்தனர். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர் ஆதித்யா அவரது பெற்றோருக்கு ஒரே மகன். நல்லா படிக்க கூடிய பையன். மருத்துவராக வேண்டும் என்று ரொம்ப ஆர்வத்தில் இருந்து உள்ளான். பெற்றோர்கள் ‘நீட்‘ வேண்டாம் என கையை பிடித்து கொண்டு அழுகின்றனர். நீட் தேர்வு ரத்து செய்வதில் தமிழக அரசு மெத்தனமாக இருக்கிறது. மாணவர்கள் இறப்பு கவலை அளிக்கிறது.

தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ‘நீட்‘ தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்து உள்ளார். இன்னும் 8 மாத காலத்தில் விடிவு காலம் பிறக்கும். அதற்காக பெற்றோர்கள், மாணவர்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.

தி.மு.க. சார்பில் தலைவர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார். ஆனால் மாணவனின் இழப்புக்கு நிதி உதவி ஈடாகாது. இது மாணவனின் பெற்றோருக்கு பேரிழப்பாகும்.

நீட் தேர்வில் கூட மாணவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லை. அறிவிப்பு இல்லை. தேர்வு எழுத சென்ற மாணவிகளை துப்பட்டாவை கழற்றுமாறு கூறி சோதனை செய்து உள்ளனர். காலை 11 மணிக்கு சென்றவர்களுக்கு சாப்பாடு கொடுக்க வில்லை. அதுவும் ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதி போட்டு உள்ளனர். எந்த ஏற்பாடும் இல்லை.

ஆனால் அ.தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக இல்லை. மாணவர்கள் தற்கொலை குறித்து பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவின் கருத்தும் கண்டனத்துக்கு உரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன், சேலம் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அருண் பிரசன்னா, காடையாம்பட்டி ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கன்னங்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் குபேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

Next Story